Jump to content

தேவாரம்

From Wikisource

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

[edit]

முதல் திருமுறை

[edit]

திருப்பிரமபுரம்

[edit]

பண் - நட்டபாடை

  1. தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
    காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
  1. முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு
    வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
    கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
    பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
  1. நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி
    ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்
    ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்
    பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
  1. விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
    உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
    மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
    பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
  1. ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன
    அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
    கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்
    பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
  1. மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி
    இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்
    கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
    பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
  1. சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
    உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
    கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்
    பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
  1. வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
    உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
    துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
    பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
  1. தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
    நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
    வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
    பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
  1. புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
    ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
    மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்
    பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
  1. அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
    பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை
    ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த
    திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே.

திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.
திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.

திருச்சிற்றம்பலம்

திருப்புகலூர்

[edit]
  1. குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்
    நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி
    முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்
    பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே.
  1. காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம்
    மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடை
    மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலைப்
    போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே.
  1. பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப்
    பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த
    உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர்
    மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே.
  1. நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ்
    சீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல குய்யக்
    காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்
    ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே.
  1. செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல்
    பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணி வாரை
    மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணிப்
    பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே.
  1. கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்
    குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்
    விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்
    முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே.
  1. வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி
    உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங்
    கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுட்கிட மென்பர்
    புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே.
  1. தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள்
    தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த
    மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர்
    பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே.
  1. நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள்
    ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்த
    ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும்
    போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே.
  1. செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக்
    கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங்
    கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்து
    மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே.
  1. புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக்
    கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலை
    பற்றியென்றுமிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்து
    குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே.

காவிரி தென்கரைத் தலம்.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்; தேவியார் - கருந்தார்க்குழலியம்மை

திருச்சிற்றம்பலம்

திருவலிதாயம்

[edit]
  1. பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி
    ஒத்தசொல்லிஉல கத்தவர்தாம்தொழு தேத்தஉயர் சென்னி
    மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலி தாயஞ்
    சித்தம்வைத்தஅடி யாரவர்மேல்அடை யாமற்றிடர் நோயே.
  1. படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கன லேந்திக்
    கடையிலங்குமனை யில்பலிகொண்டுணுங் கள்வன்னுறை கோயில்
    மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும்வலி தாயம்
    அடையநின்றஅடி யார்க்கடையாவினை அல்லல்துயர் தானே.
  1. ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்தச்
    செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோடுறை கோயில்
    வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலி தாயம்
    உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீருந்நல மாமே.
  1. ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படை சூழப்
    புற்றின்நாகம்அரை யார்த்துழல்கின்றஎம் பெம்மான்மட வாளோ
    டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும்வலி தாயம்
    பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடி யார்க்கே.
  1. புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொரு ளாய
    அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயில்அய லெங்கும்
    மந்திவந்துகடு வன்னொடுகூடி வணங்கும்வலி தாயஞ்
    சிந்தியாதஅவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளி தன்றே.
  1. ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ ரேத்தக்
    கானியன்றகரி யின்உரிபோர்த்துழல் கள்வன்சடை தன்மேல்
    வானியன்றபிறை வைத்தஎம்மாதி மகிழும்வலி தாயம்
    தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளி வாமே.
  1. கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமனுயிர் வீட்டிப்
    பெண்ணிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய பெம்மானுறை கோயில்
    மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலி தாயத்
    துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக்கதி யாமே.
  1. கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி
    அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மானமர் கோயில்
    மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலி தாயம்
    உடலிலங்குமுயிர் உள்ளளவுந்தொழ உள்ளத்துயர் போமே.
  1. பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில் மூன்றும்
    எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடி வாகும்
    எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழு தேத்த
    உரியராகவுடை யார்பெரியாரென உள்கும்முல கோரே.
  1. ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி
    ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொரு ளென்னேல்
    வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலி தாயம்
    பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரி யோரே.
  1. வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தாயத்
    தண்டவாணனடி யுள்குதலாலருள் மாலைத்தமி ழாகக்
    கண்டல்வைகுகடல் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் பத்துங்
    கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர் வாரே.

இத்தலம் தொண்டைநாட்டில் பாடியென வழங்கப்பட்டிருக்கின்றது.
சுவாமிபெயர் - வலிதாயநாதர்,
தேவியார் - தாயம்மை

திருச்சிற்றம்பலம்

திருப்புகலியும் - திருவீழிமிழலையும்

[edit]
  1. மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற
    வாணுதல் மான்விழி மங்கையோடும்
    பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப்
    புகலி நிலாவிய புண்ணியனே
    எம்மிறை யேயிமை யாதமுக்கண்
    ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய்
    மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
  1. கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில
    கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்
    பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும்
    புகலி நிலாவிய புண்ணியனே
    எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோ ர்
    இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்
    மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
  1. கன்னிய ராடல் கலந்துமிக்க
    கந்துக வாடை கலந்துதுங்கப்
    பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப்
    புகலி நிலாவிய புண்ணியனே
    இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத்
    தெம்மிறையேயிது வென்கொல்
    சொல்லாய்
    மின்னியல் நுண்ணிடை யார்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
  1. நாகப ணந்திகழ் அல்குல்மல்கும்
    நன்னுதல் மான்விழி மங்கையோடும்
    பூகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண்
    புகலிநி லாவிய புண்ணியனே
    ஏகபெ ருந்தகை யாயபெம்மான்
    எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
    மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
  1. சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
    தையலோடுந் தளராத வாய்மைப்
    புந்தியி னான்மறை யோர்களேத்தும்
    புகலி நிலாவிய புண்ணியனே
    எந்தமை யாளுடை ஈசஎம்மான்
    எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
    வெந்தவெண் ணீறணி வார்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
  1. சங்கொலி இப்பிசு றாமகரந்
    தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்
    பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப்
    புகலி நிலாவிய புண்ணியனே
    எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான்
    எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
    வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
  1. காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக்
    காம்பன தோளியொ டுங்கலந்து
    பூமரு நான்முகன் போல்வரேத்தப்
    புகலி நிலாவிய புண்ணியனே
    ஈமவ னத்தெரி யாட்டுகந்த
    எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    வீமரு தண்பொழில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
  1. இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ ள்
    இற்றல றவ்விர லொற்றியைந்து
    புலங்களைக் கட்டவர் போற்றஅந்தண்
    புகலி நிலாவிய புண்ணியனே
    இலங்கெரி யேந்திநின் றெல்லியாடும்
    எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
    விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
  1. செறிமுள ரித்தவி சேறியாறுஞ்
    செற்றதில் வீற்றிருந் தானும்மற்றைப்
    பொறியர வத்தணை யானுங்காணாப்
    புகலி நிலாவிய புண்ணியனே
    எறிமழு வோடிள மான்கையின்றி
    இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்
    வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
  1. பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த
    பான்மைய தன்றியும் பல்சமணும்
    புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண்
    புகலி நிலாவிய புண்ணியனே
    எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற
    எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
  1. விண்ணிழி கோயில் விரும்பிமேவும்
    வித்தக மென்கொலி தென்றுசொல்லிப்
    புண்ணிய னைப்புக லிந்நிலாவு
    பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி
    நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி
    நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன
    பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப்
    பாரொடு விண்பரி பாலகரே.

இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்
வீழிமிழலையில் சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

திருக்காட்டுப்பள்ளி

[edit]
  1. செய்யரு கேபுனல் பாயஓங்கிச்
    செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்
    கையரு கேகனி வாழையீன்று
    கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப்
    பையரு கேயழல் வாயவைவாய்ப்
    பாம்பணை யான்பணைத் தோளிபாகம்
    மெய்யரு கேயுடை யானையுள்கி
    விண்டவ ரேறுவர் மேலுலகே.
  1. திரைகளெல் லாமல ருஞ்சுமந்து
    செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
    கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக்
    காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
    உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல
    உத்தம ராயுயர்ந் தாருலகில்
    அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க்
    காட்செய அல்லல் அறுக்கலாமே.
  1. தோலுடை யான்வண்ணப் போர்வையினான்
    சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு
    நூலுடை யானிமை யோர்பெருமான்
    நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்
    காலுடை யான்கரி தாயகண்டன்
    காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
    மேலுடை யானிமை யாதமுக்கண்
    மின்னிடை யாளொடும் வேண்டினானே.
  1. சலசல சந்தகி லோடும்உந்திச்
    சந்தன மேகரை சார்த்தியெங்கும்
    பலபல வாய்த்தலை யார்த்துமண்டி
    பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்
    கலகல நின்றதி ருங்கழலான்
    காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்
    சொலவல தொண்டர்க ளேத்தநின்ற
    சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே.
  1. தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல்
    தாமரை செங்கழு நீருமெல்லாங்
    களையவி ழுங்குழ லார்கடியக்
    காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்
    துளைபயி லுங்குழல் யாழ்முரல
    துன்னிய இன்னிசை யால்துதைந்த
    அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க்
    காட்செய அல்லல் அறுக்கலாமே.
  1. முடிகையி னாற்றொடும் மோட்டுழவர்
    முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக்
    கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி
    காதல்செய் தான்கரி தாயகண்டன்
    பொடியணி மேனியி னானையுள்கிப்
    போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின்
    றடிகையி னாற்றொழ வல்லதொண்டர்
    அருவினை யைத்துரந் தாட்செய்வாரே.
  1. பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான்
    பெய்கழல் நாடொறும் பேணியேத்த
    மறையுடை யான்மழு வாளுடையான்
    வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
    கறையுடை யான்கன லாடுகண்ணாற்
    காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
    குறையுடை யான்குறட் பூதச்செல்வன்
    குரைகழ லேகைகள் கூப்பினோமே.
  1. செற்றவர் தம்அர ணம்மவற்றைச்
    செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங்
    கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான்
    காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
    உற்றவர் தாமுணர் வெய்திநல்ல
    உம்பருள் ளார்தொழு தேத்தநின்ற
    பெற்றம ரும்பெரு மானையல்லால்
    பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே.
  1. ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த்
    துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்
    குண்டர்க ளோடரைக் கூறையில்லார்
    கூறுவ தாங்குண மல்லகண்டீர்
    அண்டம றையவன் மாலுங்காணா
    ஆதியி னானுறை காட்டுப்பள்ளி
    வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை
    வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.
  1. பொன்னியல் தாமரை நீலம்நெய்தல்
    போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக்
    கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக்
    காதல னைக்கடற் காழியர்கோன்
    துன்னிய இன்னிசை யாற்றுதைந்து
    சொல்லிய ஞானசம் பந்தன்நல்ல
    தன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந்
    தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.

இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆரணியச்சுந்தரர், தேவியார் - அகிலாண்டநாயகியம்மை

திருச்சிற்றம்பலம்

திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்

[edit]
  1. அங்கமும் வேதமும் ஓதுநாவர்
    அந்தணர் நாளும் அடிபரவ
    மங்குல் மதிதவழ் மாடவீதி
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    செங்கய லார்புனற் செல்வமல்கு
    சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
    கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
  1. நெய்தவழ் மூவெரி காவலோம்பும்
    நேர்புரி நூன்மறை யாளரேத்த
    மைதவழ் மாட மலிந்தவீதி
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்
    சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
    கைதவழ் கூரெரி யேந்தியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
  1. தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்
    தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
    மால்புகை போய்விம்மு மாடவீதி
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
    சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
    கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
  1. நாமரு கேள்வியர் வேள்வியோவா
    நான்மறை யோர்வழி பாடுசெய்ய
    மாமரு வும்மணிக் கோயில்மேய
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
    காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
  1. பாடல் முழவும் விழவும்ஓவாப்
    பன்மறை யோரவர் தாம்பரவ
    மாட நெடுங்கொடி விண்தடவும்
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
    காடக மேயிட மாகஆடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
  1. புனையழ லோம்புகை அந்தணாளர்
    பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
    மனைகெழு மாட மலிந்தவீதி
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
    கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
  1. பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்
    பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து
    மாண்டங்கு நூன்மறை யோர்பரவ
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
    காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
  1. அந்தமும் ஆதியும் நான்முகனும்
    அரவணை யானும் அறிவரிய
    மந்திர வேதங்க ளோதுநாவர்
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
    கந்தம் அகிற்புகை யேகமழுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
  1. இலைமரு தேயழ காகநாளும்
    இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்
    நிலையமண் டேரரை நீங்கிநின்று
    நீதரல் லார்தொழும் மாமருகல்
    மலைமகள் தோள்புணர் வாயருளாய்
    மாசில்செங் காட்டங் குடியதனுள்
    கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே.
  1. நாலுங் குலைக்கமு கோங்குகாழி
    ஞானசம் பந்தன் நலந்திகழும்
    மாலின் மதிதவழ் மாடமோங்கும்
    மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
    சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
    சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
    சொல்லவல் லார்வினை யில்லையாமே.

இவைகளுஞ் சோழநாட்டிலுள்ளவை.
திருமருகலில் சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்; தேவியார் - வண்டுவார்குழலி
திருச்செங்காட்டங்குடியில் சுவாமிபெயர் - கணபதீசுவரர்,
தேவியார் - திருக்குழல்நாயகி.

திருச்சிற்றம்பலம்

திருநள்ளாறும் - திருஆலவாயும்

[edit]
  1. பாடக மெல்லடிப் பாவையோடும்
    படுபிணக் காடிடம் பற்றிநின்று
    நாடக மாடுநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    சூடக முன்கை மடந்தைமார்கள்
    துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த
    ஆடக மாடம் நெருங்குகூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
  1. திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்
    செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
    நங்கள் மகிழுநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    பொங்கிள மென்முலை யார்களோடும்
    புனமயி லாட நிலாமுளைக்கும்
    அங்கள கச்சுதை மாடக்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
  1. தண்ணறு மத்தமுங் கூவிளமும்
    வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்
    நண்ணல் அரியநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    புண்ணிய வாணரும் மாதவரும்
    புகுந்துட னேத்தப் புனையிழையார்
    அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
  1. பூவினில் வாசம் புனலிற்பொற்பு
    புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு
    நாவினிற் பாடநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    தேவர்கள் தானவர் சித்தர்விச்சா
    தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி
    ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
  1. செம்பொன்செய் மாலையும் வாசிகையுந்
    திருந்து புகையு மவியும்பாட்டும்
    நம்பும்பெ ருமைநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    உம்பரும் நாக ருலகந்தானும்
    ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்
    அம்புத நால்களால் நீடுங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
  1. பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு
    பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
    நாகமும் பூண்டநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    போகமும் நின்னை மனத்துவைத்துப்
    புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
    ஆகமு டையவர் சேருங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
  1. கோவண ஆடையும் நீறுப்பூச்சுங்
    கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்
    நாவணப் பாட்டுநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    பூவண மேனி இளையமாதர்
    பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து
    ஆவண வீதியில் ஆடுங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
  1. இலங்கை யிராவணன் வெற்பெடுக்க
    எழில்விர லூன்றி யிசைவிரும்பி
    நலம்கொளச் சேர்ந்த நள்ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப்
    புந்தியிலு நினைச் சிந்தைசெய்யும்
    அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
  1. பணியுடை மாலும் மலரினோனும்
    பன்றியும் வென்றிப் பறவையாயும்
    நணுகல் அரியநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    மணியொலி சங்கொலி யோடுமற்றை
    மாமுர சின்னொலி என்றும்ஓவா
    தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
  1. தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ்
    சாதியின் நீங்கிய வத்தவத்தர்
    நடுக்குற நின்றநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    எடுக்கும் விழவும் நன்னாள்விழவும்
    இரும்பலி யின்பினோ டெத்திசையும்
    அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
  1. அன்புடை யானை அரனைக்கூடல்
    ஆலவாய் மேவிய தென்கொலென்று
    நன்பொனை நாதனை நள்ளாற்றானை
    நயம்பெறப் போற்றி நலங்குலாவும்
    பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
    பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
    இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
    இமையவ ரேத்த இருப்பர்தாமே.

இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியேசுவரர்;
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.

திருச்சிற்றம்பலம்

திருஆவூர்ப்பசுபதீச்சரம்

[edit]
  1. புண்ணியர் பூதியர் பூதநாதர்
    புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
    கண்ணிய ரென்றென்று காதலாளர்
    கைதொழு தேத்த இருந்தவூராம்
    விண்ணுயர் மாளிகை மாடவீதி
    விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
    பண்ணியல் பாடல றாதஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே.
  1. முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார்
    முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
    அத்திய ரென்றென் றடியரேத்தும்
    ஐயன் அணங்கொ டிருந்தவூராம்
    தொத்திய லும்பொழில் மாடுவண்டு
    துதைந்தெங்கும் தூமதுப் பாயக்கோயிற்
    பத்திமைப் பாடல றாதஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே.
  1. பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார்
    போம்வழி வந்திழி வேற்றமானார்
    இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும்
    இறையவ ரென்றுமி ருந்தவூராம்
    தெங்குயர் சோலைசே ராலைசாலி
    திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
    பங்கய மங்கை விரும்புமாவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே.
  1. தேவியோர் கூறின ரேறதேறுஞ்
    செலவினர் நல்குர வென்னைநீக்கும்
    ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும்
    அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்
    பூவிய லும்பொழில் வாசம்வீசப்
    புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
    பாவியல் பாடல றாதஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே.
  1. இந்தணை யுஞ்சடை யார்விடையார்
    இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்
    வந்தணைந் தின்னிசை பாடுவார்பால்
    மன்னினர் மன்னி யிருந்தவூராம்
    கொந்தணை யுங்குழ லார்விழவில்
    கூட்டமி டையிடை சேரும்வீதிப்
    பந்தணை யும்விர லார்தம்ஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே.
  1. குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்
    கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்
    ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்
    உறைபதி யாகுஞ் செறிகொள்மாடஞ்
    சுற்றிய வாசலின் மாதர்விழாச்
    சொற்கவி பாடநி தானம்நல்கப்
    பற்றிய கையினர் வாழும்ஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே.
  1. நீறுடை யார்நெடு மால்வணங்கும்
    நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
    கூறுடை யாருடை கோவணத்தார்
    குவலய மேத்த இருந்தவூராம்
    தாறுடை வாழையிற் கூழைமந்தி
    தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
    பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே.
  1. வெண்டலை மாலை விரவிப்பூண்ட
    மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்
    வண்டமர் பூமுடி செற்றுகந்த
    மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்
    கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார்
    கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்
    பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே.
  1. மாலும் அயனும் வணங்கிநேட
    மற்றவ ருக்கெரி யாகிநீண்ட
    சீலம் அறிவரி தாகிநின்ற
    செம்மையி னாரவர் சேருமூராம்
    கோல விழாவி னரங்கதேறிக்
    கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
    பாலென வேமொழிந் தேத்தும்ஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே.
  1. பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்
    பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
    தன்னிய லும்முரை கொள்ளகில்லாச்
    சைவரி டந்தள வேறுசோலைத்
    துன்னிய மாதரும் மைந்தர்தாமும்
    சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்
    பன்னிய பாடல் பயிலும்ஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே.
  1. எண்டிசை யாரும் வணங்கியேத்தும்
    எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்
    பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும்
    பசுபதி யீச்சரத் தாதிதன்மேல்
    கண்டல்கள் மிண்டிய கானற்காழிக்
    கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
    கொண்டினி தாயிசை பாடியாடிக்
    கூடு மவருடை யார்கள்வானே.

இது சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீச்சுரர்,
தேவியார் - மங்களநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

திருவேணுபுரம்

[edit]
  1. வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம்
    பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானூர்
    தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்
    விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே.
  1. படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை
    கிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானூர்
    புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்
    விடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுர மதுவே.
  1. கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்துப்
    படந்தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழவூர்
    நடந்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல்
    விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுர மதுவே.
  1. தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு
    மிக்கவ்வரம் அருள்செய்தஎம் விண்ணோர்பெரு மானூர்
    பக்கம்பல மயிலாடிட மேகம்முழ வதிர
    மிக்கம்மது வண்டார்பொழில் வேணுபுர மதுவே.
  1. நானாவித உருவாய்நமை யாள்வான்நணு காதார்
    வானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான்
    தேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்திகழ் மந்தி
    மேனோக்கிநின் றிரங்கும்பொழில் வேணுபுர மதுவே.
  1. மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிமிக அஞ்சக்
    கண்ணார்சலம் மூடிக்கட லோங்கவ்வுயர்ந் தானூர்
    தண்ணார்நறுங் கமலம்மலர் சாயவ்விள வாளை
    விண்ணோர்துதி கொள்ளும்வியன் வேணுபுர மதுவே.
  1. மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி யரக்கன்
    தலைதோளவை நெரியச்சரண் உகிர்வைத்தவன் தன்னூர்
    கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்
    விலையாயின சொற்றேர்தரு வேணுபுர மதுவே.
  1. வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும்
    பயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனூர்
    கயமேவிய சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல்
    வியன்மேவிவந் துறங்கும்பொழில் வேணுபுர மதுவே.
  1. மாசேறிய உடலாரமண் கழுக்கள்ளொடு தேரர்
    தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானூர்
    தூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார்
    வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே.
  1. வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப்
    பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்தன பாடல்
    ஏதத்தினை இல்லா இவை பத்தும்இசை வல்லார்
    கேதத்தினை இல்லார்சிவ கெதியைப்பெறு வாரே.

திருச்சிற்றம்பலம்

திரு அண்ணாமலை

[edit]
  1. உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
    பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
    மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
    அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
  1. தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
    தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
    ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
    பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.
  1. பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ்
    சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
    ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
    காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.
  1. உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
    எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்
    முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
    அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.
  1. மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
    அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
    உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
    குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
  1. பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
    பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
    கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
    உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே.
  1. கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்
    நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
    எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
    அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.
  1. ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
    பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடித் துரித்து
    வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
    அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.
  1. விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
    கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
    அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்
    தளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே.
  1. வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்
    மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
    ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
    கூர்வெண்மழுப் படையான்நல கழல்சேர்வது குணமே.
  1. வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
    அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
    கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
    சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.

இது நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்,
தேவியார் - உண்ணாமுலையம்மை

திருச்சிற்றம்பலம்

திருவீழிமிழலை

[edit]
  1. சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்
    படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
    மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்
    விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.
  1. ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
    மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
    ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
    வேறாயுடன் ஆனானிடம் வீழிம்மிழ லையே.
  1. வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய
    உம்மன்பினொ டெம்மன்புசெய் தீசன்னுறை கோயில்
    மும்மென்றிசை முரல்வண்டுகள் கொண்டித்திசை யெங்கும்
    விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே.
  1. பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும்
    உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்
    மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
    விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.
  1. ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்
    தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்
    தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்
    மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே.
  1. கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர்
    எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப
    வல்லாய்எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்
    வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே.
  1. கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்
    புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா
    வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி
    விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே.
  1. முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை
    தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப்
    பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடு கொடுத்த
    மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே.
  1. பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா
    ஒண்டீயுரு வானானுறை கோயில்நிறை பொய்கை
    வண்டாமரை மலர்மேல்மட அன்னந்நடை பயில
    வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே.
  1. மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்
    இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப்
    பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்
    விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே.
  2. வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்
    காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்
    யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்
    ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமியின் பெயர் - வீழியழகர்,
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

திருமுதுகுன்றம்

[edit]
  1. மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
    தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாங்
    கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
    முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.
  1. தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
    இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
    மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்
    முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.
  1. விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்
    டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
    களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு
    முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.
  1. சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா
    நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்
    அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்
    முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.
  1. அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார்
    கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
    மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
    முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
  1. ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற்
    கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில்
    சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
    மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
  1. தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை முடிய
    மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்
    விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை
    முழவோடிசை நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே.
  1. செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
    கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில்
    மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா
    முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே.
  1. இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய
    செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்
    புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே
    முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.
  1. அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்
    மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்
    கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி
    முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.
  1. முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்
    புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
    நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
    பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.

இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்;
தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

திருவியலூர்

[edit]
  1. குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ
    பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்
    அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்
    விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே.
  1. ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான்
    ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்
    மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்
    வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே.
  1. செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்
    பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்
    உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உறைமேல்
    விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே.
  1. அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில்
    மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங்
    கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி
    மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே.
  1. எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்
    பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்
    கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம்
    விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே.
  1. வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்
    திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை
    அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்
    விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே.
  1. மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம்
    ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்
    தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்
    மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.
  1. பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன்
    கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து
    சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்
    விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே.
  1. வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்
    அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்
    உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம்
    விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.
  1. தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்
    பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்
    கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த
    விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே.
  1. விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத்
    தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்
    துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும்
    விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - யோகாநந்தேசுவரர்;
தேவியார் - சவுந்தரநாயகியம்மை;
சாந்தநாயகியம்மை என்றும் பாடம்.

திருக்கொடுங்குன்றம்

[edit]
  1. வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
    கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
    ஆனிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்
    தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே.